மே 10 , 2026 தேதி ஞாயிற்றுகிழமை காலை , கவிஞர் மாரிமுத்து அவர்களின் "தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது "என்ற கவிதைத் தொகுப்பு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் வெளியிடப்பட்டது.
இது கவிஞருடைய முதல் தொகுப்பு. சிங்கப்பூர் அலர் பதிப்பகத்தின் வெளியீடு.
இவ்விழாவை தன் இனிய இலங்கைத் தமிழில் நேர்த்தியாக நெறியாள்கை செய்து வழி நடத்தினார் திருமதி. ஹம்சாரிணி. அவரது கிளி கொஞ்சும் மொழியைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அத்தனை இதம் . வெயிலுக்கு வேப்பமரத்தடியில் நின்றதைப் போன்ற ஆசுவாசம் . அருவிச்சாரலின் அளி அவரது குரலில்.
திருமதி கற்பக மீனா சுருக்கமாகச் செறிவானதொரு வரவேற்புரையை வழங்கினார்.
நூலை அறிமுகம் செய்து முதலில் பேசிய கவிஞர்.அக்ஷை கல்யாண்குமார் நுட்பமான வாசிப்பும் ரசனையும் கொண்டவர். நகைச்சுவைத் ததும்ப உரையைத் தொடங்கியவர் கவிஞரின் கவிதைகளைப் பற்றி தெளிவாகத் தன் கருத்துகளை எடுத்து வைத்தார். சங்க இலக்கியங்களிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் எடுக்கப்பட்ட மேற்கோள்களுடன் இயல்பான மொழியில் சிறப்பாக அமைந்திருந்தது அவரது உரை .
அவரை தொடர்ந்து பேசிய பன்முகத் திறனாளர் கவிஞர்.தீபக் மிகவும் கச்சிதமாக பேசினார்.
சிறப்பான கவிதை தேர்வு, கவிதைகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து நுண்ரசனையுடனும் நுணுக்கமான பார்வையுடனும் தனது கருத்துகளை முன் வைத்தார். அவரது வசீகர குரலும் அழகிய உச்சரிப்பும் உரைக்கு கூடுதல் அழகு சேர்த்தன.
மற்றும் குழுவினரின் செல்லக்குட்டி, நிரந்தர பாடகி செல்வி.ஜானவி ஹரிநாராயணன் தன் கற்கண்டு குரலில் பாடல்களைப் பாடி நிகழ்வுக்கு இனிமைச் சேர்த்தார்.
புதிய அறிமுகமாக இசை கலைஞர் செல்வன். கீர்த்தி கணேஷானந்த் என்ற கே .கே அற்புதமாக கீப்போர்ட் வாசித்தார். தமிழும் இசையும் இணைந்து நூல் வெளியீடு இன்னிசை விருந்தாகவும் அமைந்தது. Elan electrical service pvt ltd நிறுவனர் திரு.ஜெயபால் இளங்கோவன் நூலை வெளியிட, நூலாசிரியரின் மனைவி திருமதி.ஹேமா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நூல் வடிவமைப்பும் அட்டைப்படமும் அத்தனை அழகு. தாள்களின் கனம், எழுத்துரு என்று அனைத்திலும் அலர் பதிப்பகத்தாரின் முத்திரை தெரிந்தது. நூல் வடிவமைப்பில் மட்டுமன்றி ஒவ்வொரு வெளியிட்டு நிகழ்வையும் பிரத்யேக கவனத்துடன் தொடர்ந்து நடத்தி வரும் அலர் பதிப்பக நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இறுதியாக கவிஞர்.மாரிமுத்து அவர்களின் ஏற்புரை. இனிய பதட்டம் கலந்திருந்தாலும் நெகிழ்ச்சியும் நன்றியும் தோய்ந்திருந்த அவரது எளிய உரை மனதுக்கு நெருக்கமாக இருந்தது.
மொத்தத்தில் நண்பர்கள் கூடி நடத்திய நிறைவானதொரு நிகழ்வு.
- பா.ரேவதி
0 Comments