
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் சிங்கப்பூரின் தேசிய நூலகத்தில் மற்றும் குழுவினர் என்ற அமைப்பின் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நடைபெற்றுவருகிறது.
அவ்வகையில் இம்மாதம் மார்ச் 29ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள இமேஜினேசன் அறையில் மற்றும் குழுவினரின் பத்தாவது மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ந்தது.
எழுத்தாளர் ரம்யா அருண் ராயன் எழுதிய வெள்ளாப்பு என்ற சிறுகதையைப் பற்றிய உரையாடலில் இருந்து நிகழ்வு துவங்கியது. வெள்ளாப்பு கதையின் அடி நாதமாக விளங்கிய வேம்பினைச் சுற்றிய கிராமத்து கதையான குப்பம்மா என்ற பேய் பற்றிய உரையாடல், பின் வெள்ளைக்காரர்கள் காலத்தில் அவர்களுக்கு இணங்கி வாழ்ந்த எளிய மனிதர்களின் கதைகளில் ஒன்றாக குப்பம்மாவின் தொன்மம் பற்றியும் உரையாடல் நீண்டது. எழுத்தாளர் கவிஞராக இருக்கும் இடங்களில் கதாப்பாத்திர சிந்தனாவோட்டத்து வர்ணனைகள் கதை ஆசிரியரின் சிந்தனையாக வருவது சரியா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒரு சிறுவனின் மனநிலையில் இருந்து எழுதும் பொழுது, எவ்வாறு அந்த வயதுக்குண்டான வர்ணனைகள் வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்ததாக, ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட குறும்படமான ‘தி நியூ பாய்’ திரையிடப்பட்டது அது குறித்து விவாதம் துவங்கியது. படத்தில் திரைக்காட்சிகளின் அடுக்குகள் எப்படி ஒரு பேனா முனையில் இருந்து சாக்பீஸ் துண்டுக்குச் சென்று பின் மீண்டும் நிகழ்காலத்துக்கு வருகிறது என்பதும், அதிக வசனம் அற்று, முக்கிய கதாப்பாத்திரத்தின் உணர்வுகள் அத்தனையும் அந்த முகத்தில் பிரதிபலிப்பதே சிறந்த திரைக்காவியமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற திரைமொழியின் அடிப்படையும் விவாதிக்கப்பட்டது. மேலும், சிறுவர்களின் உலகில் எதிர்கொள்ளும் மாற்று இனத்தவரது வெறுப்புகள் எப்படி ஒரே நொடியில் சரியாகிறது, அதைவிட பெரிய துயரங்களை அந்தச் சிறுவன் கடந்து வந்ததால் இது பெரிய துன்பம் இல்லையென்றும் கூட எடுத்துக்கொள்ளலாம் என விவாதிக்கப்பட்டது. ஆசிரியர் எதையும் பெரிதாக்காமல் சிறுவர்களின் பிரச்சனையைப் பெரிதாக்காமல் விட்டதும் அது தாமே சரியானதும் கவனிக்கத்தக்கது என்றும் கருத்துரைக்கப்பட்டது.
அடுத்த நிகழ்வாக நிகழ்வில் மூன்று கவிதைகள் குறித்து உரையாடல் அங்கம் நிகழ்ந்தது. கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ‘ஒரு பெரிய அவமானத்திற்கு பிறகு’ என்ற கவிதை திரையிடப்பட்டது. “அதிக இறுக்கம், அதிக இணக்கம் இரண்டுமே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும்” என்ற வரியிலேயே கவிதையின் உயிர் உள்ளது. மேலும் கீழும் இருப்பவை அதைக் குறித்த விளக்கங்கள் என யாழிசை பகிர்ந்தார். கடைசி நான்கு வரிகளைப் பகிர்ந்து, இவ்வுலகின் தீமைகளைப் போலவே எல்லையற்றது அதன் கருணையும் என்பதில் முடித்திருப்பது சிறப்பாக இருப்பதாகப் பலரும் பகிர்ந்தனர். அவமானத்தின்போது, மர்மமாகப் புன்னகைப்பவர்கள், கேட்காமலேயே தன் கனிவை வழங்குபவர்கள், செயற்கையாக பேச்சை மாற்றுபவர்கள், எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம். ஆனால் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் சாதூர்யமாகத் தப்பிச்செல்ல வேண்டும் என்கிறார் கவிஞர் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எறும்பின் வழித்தடம் என்ற கவிஞர் நிலாக்கண்ணனின் கவிதை உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை வேயப்பட்ட ஒரு வீட்டில் குடியிருக்கும் எளிய மனிதர்களின் துயரங்கள் எவ்வாறு அதில் சொல்லப்பட்டிருக்கிறது, இறுதியில் அந்த வீட்டை இரு கண்ணுள்ள மிருகம் என்ற வர்ணனையும், கடவுளைக் குத்திக் கொண்டிருக்கத் தோன்றுமா தோன்றாதா என்ற இடம் எவ்வளவு சரியென விவாதிக்கப்பட்டது. ஏன் கடவுளை இழுக்க வேண்டும், வரமாகக் கேட்கலாமே எனவும் கருத்துரைக்கப்பட்டது. ஆஸ்பஸ்ட்டாஸின் கீழ் குடியிருப்பது எவ்வளவு இரைச்சல் மிக்கது, வெப்பமிக்கது என்பது உரையாடலில் எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பட்டது. எறும்பின் வழித்தடம் என ஏன் பெயர் வைத்திருக்கிறார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அடுத்து கவிஞர் லாக் ப்ரெவெர் எழுதிய தமிழில் வே. ஶ்ரீராம் மொழிபெயர்த்த கவிதையான ‘குடும்ப வாழ்க்கை’ எனும் கவிதை எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு போர்ச்சூழலில் எளிய மக்களின் வாழ்க்கை எப்படி ஒரு வட்டம் போல தனது பொருளீட்டும் அன்றாடங்களுக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறது என்பதும், என்ன நடக்கிறது நாட்டில் என்று கூட அறியாமலேயே அவர்களது மகன் போருக்குச் செல்கிறான், போரில் இறந்தபின்னும் அந்த பெற்றோர் தங்களின் வாழ்க்கையை உழைப்பைத் தொடர்கிறார்கள் என்றும் கருத்துரைக்கப்பட்டது. மேலும், போரினால் யார் வியாபாரம் பெருகிறது என்பதும் விவாதிக்கப்பட்டது. போர் நடக்கையில் எளிய மக்களின் வாழ்க்கையில் நிகழும் நுட்பமான அரசியல் குறித்த கவிதையாக இது பார்க்கப்பட்டது.
சிறுகதை, குறும்படம் மற்றும் கவிதைகள் குறித்தான நல்ல உரையாடல்களோடு நிகழ்வு நடந்தேறியது. குழுப்புகைப்படத்துடன் நிகழ்வு இனிதே முடிந்தது.
~ ச. மோகனப்ரியா
0 Comments