ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் சிங்கப்பூரின் தேசிய நூலகத்தில் மற்றும் குழுவினர் என்ற அமைப்பின் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நடைபெற்றுவருகிறது.

அவ்வகையில் இம்மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 4. மணிக்கு தேசிய நூலகத்தின் முதல் தளத்தில அமைந்துள்ள VBR அறையில் மற்றும் குழுவினரின் ஒன்பதாவது மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ந்தது.



எழுத்தாளர் சித்ரன் எழுதிய “ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்" சிறுகதை குறித்த உரையாடல் நிகழ்ந்தது. சிறுகதையின் கதைக்களம், கட்டமைப்பு, அரசியல் மற்றும் சமூகப்பார்வை, விமர்சனம் ஆகிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு சுவாரஸ்யமான உரையாடலை முன்னெடுத்தார்கள். அபுனைவு கலந்துரையாடலில் எழுத்தாளர் வெங்கட பிரசாத் எழுதிய “தேவதச்சனின் கவியுலகம்” என்ற கட்டுரையொன்றைக் குறித்தும் உரையாடலைத் தொடர்ந்தனர். கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைக் குறித்தும், அவரை வளரும் கவிஞர்கள் வாசிக்க வேண்டியதன் அடிப்படைக் குறித்தும் உரையாடல் நீண்டது. கவிஞர் தேவதச்சனின் கவிதைகளை ஒரு கட்டுரையினுள் முற்றிலுமாக உரையாடிவிட முடியுமா என்பது குறித்தும் விவாதம் நிகழ்ந்தது. கவிஞர் தேவதச்சனின் கவிதைகளில் துயர்களை கையாண்ட விதமும் அலசப்பட்டது.



மூன்று கவிதைகள் குறித்த புரிந்துணர்வையும் அவரவர் பார்வைகளையும் பரிமாறும் அங்கம் அடுத்ததாக நிகழ்ந்தது. கவிஞர் பொன்முகலியின் கவிதை, கவிஞர் என்.டி. ராஜ்குமாரின் கவிதை மற்றும் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை என மூன்றுவிதமான கவிதைகளை பல்வேறுவிதமான கோணங்களில் பலரும் அணுகினர். சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை குறித்த சுவையான கலந்துரையாடல் அங்கமாக இம்மாதம் மற்றும் குழுவினர் நிகழ்ந்தது.





குழு புகைப்படம் எடுத்தபின் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

- ச.மோகனப்ரியா