மன்னிப்பின் இரவு - மனுஷ்யபுத்திரன்



காணொளி ▶ மன்னிப்பின் இரவு - மனுஷ்யபுத்திரன்

மன்னிப்பின் இரவில்
நான் செய்யாத செய்த
எல்லாக் குற்றங்களுக்கும்
நான் கடவுளிடம்
மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்
அன்பே
உன்னிடமும் கூட

மேலும் என்னால் யாரோ சிந்திய
ஒரு துளிக்கண்ணீரிடமும்
மன்னிப்புக் கோருகிறேன்

மன்னிக்கப்பட்டால்தான்
ரட்சிக்கப்படுவோம் என
திரும்பத் திரும்ப நம்பவைக்கப்பட்டிருக்கிறேன்
என் குற்றங்களின் புத்தகத்தில்
ஒருவரியும் எழுதப்பட்டிருக்கவில்லை

ஆயினும் நான்
மன்னிப்புக்கோருகிறேன்
கண்ணுக்குப் புலப்படாத
குற்றத்தின் பதிவுகள் அங்கிருக்கலாம்

ஒருவேளை
சில செடிகளுக்கு
நான் நீரூற்ற மறந்திருக்கலாம்
நான் களைத்து அமர்ந்த புல்வெளிகளில்
சில புற்கள் நசுங்கியிருக்கலாம்
பசித்த ஒரு மனிதனுக்கு
நான் பாராமுகமாய் இருந்திருக்கலாம்
ஒரு நேசித்த இதயத்தில்
என் அறியாமையால்
நான் ரத்தம் சிந்தவைத்திருக்கலாம்

என் துயரங்களின் ரயில்
எந்த ஸ்டேஷனிலும்
நில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது
நான் பறந்தலைந்து திரும்புகிற
ஒவ்வொருகூடும் கலைக்கப்பட்டிருக்கிறது

எனது ஒரு சிறகு
எப்போதும் ஒடிந்திருக்கிறது
நான் கையிலேந்திய
ஒவ்வொரு மலரும் எங்கோ தவறிப்போகிறது
யார் தந்த சாபமோ என் வீட்டைவிட்டு
வெகு காலமாக
வெகுதூரத்தில் வசிக்கிறேன்

மன்னிப்பின் இரவில்
நான் மண்டியிட்டிருக்கிறேன்
என்னை முழுமையாக
ஒப்படைத்துக்கொள்கிறேன்
மன்றாடுதலின் கண்ணீரை
ஆறாகப் பெருகச் செய்கிறேன்

குற்றமிழைத்தவர்கள்தான்
மன்னிப்புக்கோரவேண்டுமா என்ன?
அப்படி ஒன்றுமில்லை
மன்னிப்பு
தன்னைத்தானே சுத்தப்படுத்தும்
ஒரு எளிய சடங்கு
அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும்போதும்
ஒரு நதியில் இறங்குவதுபோல
ஒரு அருவிக்கு கீழ் நிற்பதுபோல

மன்னிக்கும் இரவில்
நான் யாரையும் மன்னிக்க விரும்பவில்லை
மன்னித்தல் என்பதில்
ஒரு அகந்தை இருக்கிறது
ஒரு அதிகாரம் இருக்கிறது
அவற்றைச் சுமக்க
எனக்கு சக்தியில்லை

மாறாக
இறைவா நான் மன்னிக்கப்படுதலையே
பெரிதும் வேண்டுகிறேன்
மன்னிக்கப்படுதலின் மூலம்
இந்த இருட்டிலிருந்து
நாங்கள் வெளியே வந்துவிடுவோம்
என் வீட்டிற்குப் போக
எனக்குப் பாதை தெரிந்துவிடும்

மன்னிக்கப்படுதலில்
ஒரு கருணை இருக்கிறது
ஒரு அன்பு இருக்கிறது

இறைவா
மன்னிக்கும் இரவில்
மன்னிப்பதைத் தவிர
உனக்கு வேறு தேர்வுகள் இல்லை

அன்பே
மன்னிக்கும் இரவுதான்
நாம் எல்லாவற்றையும்
சரி செய்துகொள்ள கடைசி சந்தர்ப்பம்

மன்னிப்பின் மலர்கள்
இந்த இரவில் நறுமணம் கொள்வதுபோல
எந்த இரவிலும் கொள்வதில்லை

- மனுஷ்யபுத்திரன்

குரல்: கெளதம்

Comments

Popular Posts