குழந்தைகள் பூங்கா - கல்யாண்ஜி

காணொளி ▶ குழந்தைகள் பூங்கா - கல்யாண்ஜி
ஊஞ்சலில் இரண்டு
அம்மாக்கள் ஆடுகிறார்கள்.
விலகும் துணி, பறக்கும் கூந்தல்.
எது குறித்தும் கவனம் அழிந்து
ஏகாந்த விடுதலையின்
அரைவட்ட உச்சிக்கு
எவ்வுதல்.
எழுத்து, சொல், பொருளற்ற
ஆனந்தக் கூச்சல்.
சுவரொட்டிகளாக அப்பியிருந்த
அடுக்களை, படுக்கையறை
இன்ன பிற முகங்களைக்
கிழித்துக் காற்றில் விடும்
உரத்த சிரிப்பு.
எல்லையின்மையின் பெருவெடிப்பில்
இடுங்கிய கண்களில்
ஈரக் கசிவு.
குழந்தைகள் பூங்கா
ஊஞ்சலில்
இப்போது
குழந்தைகள் ஆடுகிறார்கள்
அம்மாக்கள் அல்ல.
- கல்யாண்ஜி
குரல்: ஸ்ருதி கல்யாணகுமார்


Comments
Post a Comment