பிந்திமுந்தி - கார்த்திக் நேத்தா

காணொளி ▶ பிந்திமுந்தி - கார்த்திக் நேத்தா
நெடுஞ்சாலை மரத்தடியில்
தியானத்திலிருந்தான் புத்தன்.
அரச இலை அவன் மேல் உதிர்ந்தது
விழிக்கவில்லை
காற்று புழுதி வாரி வீசியது
விழிக்கவில்லை
மழைத்துளிகள் வீழ்ந்தன
அப்படியே இருந்தான்
குறுக்காகக் காகமொன்று கடந்தது
ஓடுடைய கூழாங்கல்லாய்
உறைந்துபோயிருந்தன அவன் கண்கள்
யசோதரா இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்
மனம் நோக்கி வேர்விட்டிருந்தது அவனது பிரக்ஞை
தலைமை சீடன்
பெண்ணொருத்தியோடு ஓடி விட்டதாக
யாரோ சொன்னார்கள்
அசைவற்று இருந்தான்
மண்ணை கிளறியபடி
மூச்சுவிட்டு போய்க்கொண்டிருந்தன
கோடிகோடி எறும்புகள்
சவமாய் ஜீவித்திருந்தான்
நீ ஞானம் அடைந்துவிட்டாய் என
யாரோ சொன்னார்கள்
மெல்ல கண் திறந்தான்
எதிரில் சிறு குழந்தை
சிரித்துக்கொண்டிருந்தது
வெகுநாட்களுக்குப் பிறகு
ஆழ்ந்து அழுதான்
தன் துறவை
மண்பொம்மையாக மாற்றி
குழந்தைக்குத் தந்தான்
சிறிதுநேரம் விளையாடிவிட்டு
தூக்கிப்போட்டுவிட்டது குழந்தை
- கார்த்திக் நேத்தா
குரல்: கெளதம்


Comments
Post a Comment