ஓவியத்தில் எரியும் சுடர் - சுந்தர ராமசாமி



காணொளி ▶ ஓவியத்தில் எரியும் சுடர் - சுந்தர ராமசாமி

ஓவியத்தில் எரியும் சுடர் - சுந்தர ராமசாமி
அந்த ஓவியத்தில் எரியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியரின் விரல்களை
எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்,
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது

கவிஞர் சுந்தர ராமசாமி

குரல்: மானசி

Comments

Popular Posts